

டிஜிட்டல் உலகின் பயன்களை முதியவர்கள் பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நேற்று அனைத்து வயதினருக்குமான டிஜிட்டல் சமத்துவம் என்ற தலைப்பில் சென்னை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முதியோருக்கான விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டனர்.
சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழுவினர் தாரேஸ் அகமது, சென்னை மருத்துவ கல்லூரி டீன் தேரணிராஜன், முதியோருக்கான துறை தலைவர் சாந்தி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
முதியவர்கள் நல்ல ஆரோகியத்துடன் இருந்தால் வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன் தரும். இந்த ஆண்டு முதியோர் தினத்தின் கருப்பொருள் ‘டிஜிட்டல் சமத்துவம்’ ஆகும். அதாவது முதியோர்களும் டிஜிட்டல் உலகை அணுகவும், அதன் பயன்களை அனுபவிக்கவும் தேவையான, எளிதான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
இதன்மூலம் முதியவர்கள் தனிமை, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து வெளிவர முடியும். எனவே, நாம் அனைவரும் இதற்காக எல்லாவித முயற்சிகளையும் அவரவர் நிலையிலிருந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.