

சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றிலும் தேவையற்ற பொருட்களை அகற்றுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அடையாறு மண்டலத்தில் 27 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இக்கூட்டத்தில், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் அனைத்து கட்டிடங்கள் மற்றும் வீடுகளிலும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கொசுப்புழு வளரும் இடங்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மேலும், பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட கள ஆய்வில் 12,546 வீடுகளில் கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
செப்.1 முதல் 29-ம் தேதி வரை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசுப்புழு வளரும் இடங்களைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளில் 3,619 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டுக்கு கொசு மருந்து தெளிப்பான்களுடன் 2 பேர் என 200 வார்டுகளுக்கு மொத்தம் 400 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் புகைபரப்பும் இயந்திரங்களைக் கொண்டு தினமும் காலை 6 முதல் 7.30 மணி வரையும், மாலை 6 முதல் 7.30 வரையும் புகையைப் பரப்பி, கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.