

அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர், ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் ஆகிய பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
மேலும், ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வும் இந்த வாரியத்தால் நடத்தப்படுகிறது.கடந்த 2017 செப்டம்பர் 16-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மதிப்பெண் பதிவு செய்யும் நிலையில் இந்த முறைகேடுகள் செய்யப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. அவர்களின் பெயர், முகவரி விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டது.
2017-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கான இணையவழி தேர்வு இந்த மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில், 2017-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த 66 பேரின் பெயர், முழு முகவரி, பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.