

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்றும், மீலாடி நபி பண்டிகையை ஒட்டி 19-ம் தேதியும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு மாவட்டங்களிலும் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இம்மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறு வதால், முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதி களில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் மூடப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 8 நாட்களுக்குடாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது ஆதர வாளர்களை உற்சாகப்படுத்த மதுபாட்டில்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
1,920 மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி வில்லியனூர் தில்லை நகரில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸார் அங்கு சென்று, பாகூர் அடுத்த அரங்கனூர் நிர்ணயப்பட்டு பகுதியைச் சேர்ந்த கதிர் (35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 1,920 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.