Published : 01 Oct 2021 09:01 PM
Last Updated : 01 Oct 2021 09:01 PM

தி.மலை அண்ணாமலையார் கோயில் அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் : இணை ஆணையர் நடவடிக்கை 

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நிர்வாகக் குளறுபடி என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 2 அலுவலர்களை இடமாற்றம் செய்து இணை ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் இன்று(1-ம் தேதி) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் வருண லிங்கம் அருகே ரூ.20 கோடி மதிப்பில் உள்ள இடத்தை அபகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வாழ்ந்து வந்த சிவனடியாரின் மறைவுக்கு பிறகு, அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டுக்குள், இடம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு, கோயில் நிர்வாகம் மூலம் பூட்டப்பட்டுள்ளது.

அந்த பூட்டுக்கான சாவிகள், கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இருப்பினும், அந்த இடம் திறக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையறிந்த கோயில் நிர்வாகம், ரூ.20 கோடி மதிப்புள்ள இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டு வந்தது.

இது தொடர்பாக வருவாய் துறையினரும் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில், கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சாவியை கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு கோயிலில் உள்ள அலுவலர்கள் துணை போனதாக பக்தர்கள், ஆன்மிக பற்றாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சாவிகளை பாதுகாக்கும் பொறுப்பு வகிக்கும் கோயில் மணியக்காரர் செந்தில் என்கிற கருணாநிதி, கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் அதிரடி நடவடிக்கையின் மூலம், பக்தர்கள் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்துள்ளது.

இதேபோல், அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோ சாலையில் பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. ஆனால், பராமரிப்பு பணியில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்பட்டு வந்துள்ளது. மேலும் பசுக்களை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 7 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு இந்து அமைப்புகள் தயாரானது. இந்த நிலையில், கோ சாலையை பராமரிக்கும் பொறுப்பு வகிக்கும் பதிவறை எழுத்தர் ராஜாவை, திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடியில் உள்ள முருகன் கோயிலுக்கு இடமாற்றம் செய்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் நிர்வாக குளறுபடி மற்றும் பராமரிப்பு பணியில் மெத்தனம் போன்ற குற்றச்சாட்டுகள் நிடித்து வந்த நிலையில், 2 அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும், உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்குடன், அண்ணாமலையார் கோயிலில் நீண்ட காலமாக கோலோச்சி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x