

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜூ, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது. இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், எம்பிசி பிரிவிலுள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. குறிப்பாக எம்பிசி வகுப்பில் உள்ள குலாலர் சமூகத்திற்கு 2.5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் எங்கள் சமூகம் உள்ளிட்ட பலதரப்பினருக்கான வாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாதி வாரி விபரங்கள் சேகரிப்பதற்காக ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவிடம் இருந்து எந்தவித அறிக்கை மற்றும் பரிந்துரைகள் பெறாமல் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர், இது தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடக் கூறி விசாரணையை அக்.4 க்கு ஒத்திவைத்தார். வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 25 வழக்குகள் உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளன.