நிதிக்குழுவில் இடம் பெறாததால் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு  நிதி கிடைப்பதில் தொடரும் சிக்கல்

நிதிக்குழுவில் இடம் பெறாததால் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு  நிதி கிடைப்பதில் தொடரும் சிக்கல்
Updated on
2 min read

நிதிக்குழுவில் இடம் பெறாததால் புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் தொடர்கிறது. மாநில அரசே நிதி ஒதுக்க வேண்டிய சூழல் தொடர்கிறது.

நிதித் தட்டுப்பாட்டு நிலவும் சூழலில் இதை எப்படி சமாளிப்பது என்ற அச்சத்திலும் புதுச்சேரி அரசு உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக கடந்த 1968-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன்பின்னர் 38 ஆண்டுகள் கழித்து பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின் 2006-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்து, மொத்தம் 1138 பிரதிநிதிகள் தேர்வானார்கள். இப்பதவிக்காலம் முடிந்து கடந்த 13.7.2011ல் இருந்து இப்பதவிகள் காலியாகவே உள்ளன.

பதவிகாலம் 2011ல் முடிவடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை அடுத்த தேர்தல் நடத்தவில்லை.

2012ல் உள்ளாட்சித்தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்கு சரியான இடஒதுக்கீடு தரப்படவில்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து பல வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உள்ளாட்சித்தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

ஆனால் தேர்தல் பல காரணங்களினால் நடத்தவில்லை. இந்நிலையில் மாஹே வழக்கறிஞர் அசோக் குமார் நீதிமன்ற உத்தரவை புதுச்சேரி அரசு செயல்படுத்தவில்லை என்று வழக்கை தொடர்ந்தார். அதையடுத்து உச்சநீதிமன்றம் புதுச்சேரியில் ஆறு மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் கண்டிப்பான உத்தரவை கடந்த ஏப்ரலில் பிறப்பித்துள்ளது.

முக்கியமாக அரசியலமைப்பு சட்ட விதிப்படி மேலும் தாமதத்தை ஏற்கமுடியாது என்று தெரிவித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவில் 2 மாதங்களுக்குள் உள்ளாட்சித்துறை தொகுதி மறுசீரமைப்பை செய்ய வேண்டும். நான்கு மாதங்களில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அண்மையில் மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் உள்ளாட்சித் தேர்தலை மூன்று கட்டங்களாக அறிவித்தார்.

இந்நிலையில் பட்டியிலினத்தவருக்கு இடங்களை ஒதுக்கீடு செய்ததில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதனடிப்படையில் சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது வழக்கு தொடர்ந்துள்ள சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர். அரசு பின்புலத்தில் தான் இவ்வழக்கு தொடரப்பட்டு இருக்கலாம் என்ற கோணம் உள்ளது.

2006ல் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தோர் தரப்பில் பேசியபோது, "புதுச்சேரி சிறிய ஊர். உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்தால் எம்எல்ஏக்கள் பலருக்கும் தங்களின் மதிப்பு குறையும் என்ற எண்ணமுள்ளது. அதுவும் இத்தேர்தல் நடக்க தாமதம் ஆவதற்கு ஓர் காரணம். புதுச்சேரியில் 30 எம்எல்ஏ தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருப்பவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், மாற்றுக் கட்சியில் இணைந்து வேட்பாளராவது இங்கு சர்வசாதாரணம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலே இதற்கு ஓர் உதாரணம்.

தற்போது உள்ளாட்சித் தேர்தலில் 812 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 108 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் அரசியல் சாராதது. அதை தவிர்த்து 5 நகராட்சித்தலைவர்கள் 116 கவுன்சிலர்கள், 108 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு அரசியல் சின்னங்களுடன் போட்டியிட வேண்டும். வேட்பாளர்களை நிறுத்தி, அதற்கான செலவு செய்யும் மிகபொறுப்பு கட்சிகளுக்கு உள்ளது. எம்எல்ஏ தொகுதியில் உள்ள வார்டுகளில் பிற கட்சியினர் கவுன்சிலராகிவிட்டால் அது பிரச்சினையாகும் என்ற நினைப்பும் எம்எல்ஏக்களுக்கு உண்டு. உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்தால் எம்எல்ஏக்களுடன் அதிகார போட்டி வந்து விடும் என்ற எண்ணமும் உள்ளது. புதுச்சேரியில் எம்எல்ஏ தொகுதியே சிறிதாக இருப்பதால் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது பல எம்எல்ஏக்களுக்கு விருப்பமில்லை. அதை சட்டப்பேரவையிலேயே பலரும் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். உண்மையில் இத்தேர்தலை நடத்த அரசியல் கட்சிகளுக்கு விருப்பமே இல்லை." என்கின்றனர்.

நிதிக்குழுவில் இல்லை- நிதியும் இல்லை

தேர்தல் நடத்தினாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல்தான் என்ற பேச்சும் உள்ளது. இதுபற்றி உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரி நிதிக்குழுவில் இடம் பெறவில்லை. அதனால் புதுச்சேரிக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இல்லை என்று கடந்த முறை தெரிவிக்கப்பட்டது. மாநில அல்லது யூனியன் பிரதேச நிதிக்குழுக்களில் ஏதேனும் ஒன்றில் கூட புதுச்சேரி இடம் பெறாத நிலை தொடர்கிறது. தற்போதும் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மத்திய அரசிடமிருந்து தனியாக நிதி கிடைக்கவாய்ப்பு இல்லை. ஆனால் பிற மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக மத்திய அரசு நிதி ஒதுக்கப்படுகிறது. புதுச்சேரியிலோ மாநில அரசின் பட்ஜெட்டில்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கவேண்டி வரும். ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் உள்ள புதுச்சேரி அரசுக்கு மேலும் சுமையாகிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. கடந்தமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசின் நிதி ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. அதேநிலைதான் தொடர்கிறது" என்று குறிப்பிட்டனர்.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "தற்போது பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு உள்ளதால், உள்ளாட்சித்தேர்தலுக்கு பிறகு புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இக்கோரிக்கையை அரசு தரப்பும் ஜிஎஸ்டி கூட்டத்தில் வைத்துள்ளது. மத்திய அரசும் இக்கோரிக்கையை ஏற்கவாய்ப்புள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in