

டெல்டா மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை மூலமாக நேரடி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது, என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி வரவேற்றார்.
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
''சமுதாயத்தில் வாழும் அனைத்து மக்களும் சமமாக இருக்கும் விதமாக இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசால் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்களுக்குச் சரிசமமாக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் இயற்றியதன் மூலம் 1928-ம் ஆண்டு தந்தை பெரியார் வைத்த கோரிக்கையை 1989-ம் ஆண்டு கலைஞர் நிறைவேற்றினார்.
தற்போது முதல்வர், அரசுப் பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இந்த அரசுத் திட்டங்களால் பயன்பெறும் பெண்கள், தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும், சுயமாகக் காப்பாற்றிக் கொள்ள முடியும். பெண்கள் சம உரிமை பெற்று, தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும்''.
இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”ஆன்லைன் மூலம்தான் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை எந்தவித சிரமமும் இன்றி அவர்களிடம் வாங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சன்னரக நெல்லுக்கு ரூ.100 உயர்த்தி ரூ.2,060 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அது நடைமுறைக்கு வருகிறது. பொது ரகத்திற்கு ரூ.75 உயர்த்தி ரூ.2,015 வழங்கப்படவுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் சார்பில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை மூலமாக 700 நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை”.
இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.