

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அனைத்துக் கோயில்களையும் திறக்கக் கோரிய வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த லோக்கைசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''கரோனா பரவலால் தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்கள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோயில்களுக்கு அதிக அளவில் செல்வர். குறிப்பாக அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு நடத்துவது சிறப்பானது. அரசின் தடை காரணமாகக் கோயில்களுக்கு பக்தர்கள் செல்லமுடியாத சூழல் உள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றுப் பரவலும் குறைந்து வருகிறது. எனவே புரட்டாசி மாத சனிக்கிழகைளில் கோயில்களைத் திறக்கக் கோரி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்துக் கோயில்களையும் திறக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''அனைத்துக் கோயில்களிலும் ஆகம விதிகளைப் பின்பற்றி அனைத்துப் பூஜைகளும் நடத்தப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.