Published : 01 Oct 2021 02:23 PM
Last Updated : 01 Oct 2021 02:23 PM

உணவு, உறைவிடம், ஊக்கத்தொகை, புத்தகங்கள்; யூபிஎஸ்சி தேர்வுக்காகச் செயல்படும் அண்ணா மேலாண்மை நிலையம்: முதல்வர் பெருமிதம்

சென்னை

உண்ண உணவு, தங்க உறைவிடம், 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, பேராசிரியர்கள், ஆட்சிப் பணி அலுவலர்கள், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பாதுகாப்பான வளாகம் என அண்ணா மேலாண்மை நிலையம், யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற விரும்பும் இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (1.10.2021) சென்னை, அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெற்ற, 2020-21ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

''அரசுப் பணி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விருப்பமாக இருக்கக்கூடிய பணி. அதிலும் குறிப்பாக இந்திய ஆட்சிப் பணி என்பது எண்ணற்ற இளைஞர்களின் கனவாக இருக்கக்கூடிய நிலை.

வசதி படைத்தவர்கள் மட்டுமே எழுத முடியும் என்றிருந்த இந்தத் தேர்வைக் கடைக்கோடியில் இருப்பவர்களும் எழுத வேண்டும் என்பதற்கு அடித்தளம் அமைக்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 1966ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சார்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தேர்வு மையம் தொடங்கப்பட்டது. ஆனால் அது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக 1971-ம் ஆண்டு இன்னொரு சிறப்பு மையம் அவர்களுக்காக அமைக்கப்பட்டது.

இந்த இரண்டு மையங்களையும் அப்போதைய முதல்வர் கருணாநிதி 2000-ம் ஆண்டு ஒருங்கிணைத்து அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம் என்று பெயரிட்டு, அண்ணா மேலாண்மை நிலையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

எளிய குடும்பங்களிலிருந்து வருகிற இளைஞர்களுக்குச் சுட்டுவிரலாகவும், கைப்பிடித்து அழைத்துச் செல்கிற ஆதரவுக் கரமாகவும் அமையும் பொருட்டு இளைஞர்கள் தங்குவதற்காகவும், உணவருந்துவதற்காகவும், பயிற்சியை எதிர்கொள்வதற்காகவும், அரசு செலவில் வசதிகள் செய்து தரப்பட்டன. அவர்கள் கடிவாளமிடப்பட்ட குதிரைகளைப் போல போட்டித் தேர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இந்த மையத்தை மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக நடத்தி வருகிறது. இம்மையத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு செய்தியாக அமைந்திருக்கிறது.

இந்த மையத்தில் வெளிப்படையாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 325 தகுதி பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 225 பேர் விடுதியிலேயே தங்கிப் படிக்கிறார்கள். 100 பேர் பகுதிநேரப் பயிற்சியாளர்களாக அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு, முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த இரு தேர்வுகளிலும் தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்கும் இட ஒதுக்கீட்டு முறை கையாளப்பட்டு அனைத்துப் பிரிவைச் சார்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

உண்ண உணவு, தங்க உறைவிடம், கற்றுத்தர பேராசிரியப் பெருமக்கள், அனுபவங்களைப் பகிர ஆட்சிப்பணி அலுவலர்கள், குறிப்புகளைப் புரட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பாதுகாப்பான வளாகம் என்று அனைத்து வசதிகளும் கொண்ட இந்த வளாகம் இத்தேர்வில் வெற்றிபெற விரும்பும் இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்பதை இந்த நேரத்தில் நான் கூற விரும்புகிறேன்.

இந்த மையத்தில் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி பெறுபவர்கள் நூல்களை வாங்கித் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது.

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலை எதிர்கொள்ள மாதிரி ஆளுமைத் தேர்வுகள் நடத்தப்படுவதோடு அவர்களுடைய செயல்பாட்டைக் காணொலி மூலம் பதிவு செய்து தங்களுடைய குறை நிறைகளை அறிந்துகொள்ள குறுந்தகடுகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் டெல்லியில் ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்வதற்கு ஐயாயிரம் ரூபாய் பயணப்படி வழங்குவதுடன் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது. இன்று இந்த மையம் அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர வழிகாட்டி மையமாகத் திகழ்கிறது.

இன்று நாம் 2020ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதற்காக இங்கு கூடியிருக்கிறோம். இதில் பெண்களில் ஏழு பேர், ஆண்களில் ஒன்பது பேர் இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களுள் ஒருவர் மாற்றுத்திறனாளி. குடிமைப் பணித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டியிட்ட தேர்வில், நீங்கள் உங்கள் திறமையால், வைராக்கியத்தால், உழைப்பால் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு அளித்த நம்பிக்கையும் உற்சாகமும் உங்களைத் தீவிரமாகப் படிக்கத் தூண்டியிருக்கிறது.

குடிமைப் பணி அலுவலர்கள் அரசின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றில் ஒரு தூணாக இருப்பவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசு நிறைவேற்றும் சட்டங்களையும், தீட்டித் தரக்கூடிய திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் ஏழை எளிய மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற பெரும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. துரிதமான நடவடிக்கை, விரைவான செயல்பாடு, ஓயாத உழைப்பு, சார்நிலை அலுவலர்களை ஊக்கப்படுத்தும் தன்மை, தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்காத தலைமைப் பண்பு, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் போன்றவற்றையெல்லாம் அவர்கள் பெற்றிருக்கிறார்களா என்பதைப் பரிசோதிக்கும் பொருட்டுதான் இத்தகைய கடினமான போட்டித் தேர்வு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. உலக அளவில் மிகக் கடுமையான போட்டித் தேர்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இத்தகைய போட்டித் தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றிருப்பது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை. நீங்கள் எல்லோரும் அரசின் உயர் பதவிகளில் அமர்ந்து பணியாற்றும்போது, தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நன்மைகள் தடம் புரளாமல் சென்றடைய வேண்டும் என்கிற எண்ணத்தோடு பாடுபடுவீர்கள் என நான் நம்புகிறேன். இந்திய அளவில் உயர் பணிகளில் இருக்கிறபோது நீங்கள் பிறந்த மண்ணை, வளர்ந்த மண்ணை, தவழ்ந்தபோது பேசிய தாய்மொழியை மறக்காமல் செயல்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

குடிமைப் பணியில் தேர்வு பெறுவது என்பது கடவுச்சீட்டு மட்டும்தான். அதுவே பயணச் சீட்டாகி விடாது. இது நுழைவாயிலே தவிர இதையே மாளிகை என்று கருதிவிடக் கூடாது. நீங்கள் இனிமேல்தான் அதிகம் உழைக்க வேண்டிய தருணங்களைச் சந்திக்கப் போகிறீர்கள்.

இரண்டு ஆண்டுகள் நீங்கள் ஆற்ற வேண்டிய பணி குறித்து உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவிருக்கின்றது. அந்தப் பயிற்சியின்போது இன்னும் நன்றாக உங்களைப் பட்டை தீட்டிக்கொள்ளுங்கள். உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நிர்வாகத்தின் ஆழத்தை அனுபவம் வாய்ந்த மற்ற அலுவலர்களிடமிருந்து உறிஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சி மேலாண்மையை உயர்த்திக் கொள்ளுங்கள். சமூக நுண்ணறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள். சிக்கல்களில் சிதைந்து போகாமல் சமாளிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல பணிகளை ஆற்றும் ஆற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள். பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் பரிமாணத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவரிடமிருந்து எவ்வளவு வாழ்க்கை நெறிகளை நாம் பெற முடியும் என்பதிலும் விழிப்புணர்வோடு இருங்கள்.

நாம் பெற்றிருக்கிற வெற்றி நமக்கானதல்ல, சமூகத்திற்கானது என்று சிந்தியுங்கள். எப்படியெல்லாம் பயிற்சியில் பெறுகிற அறிவைக் களத்தில் பயன்படுத்தலாம் என்று நீங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். அப்போதுதான் அந்தப் பயிற்சி உங்களை மின்னும் வைரமாக, ஒளிரும் மாணிக்கமாக, மங்காத தங்கமாக, மிளிரும் முத்துகளாக மாற்றி அமைக்கும்.

இந்திய ஆட்சிப் பணியில் வந்தவுடன் நாம் எந்தச் சிற்றூரிலிருந்து வந்தோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒருபோதும் சிந்திக்கக் கூடாது. அரசு வசதிகளை எவ்வாறு துய்க்கலாம் என்று மனக்கணக்கு போடக்கூடாது. நீங்கள் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்ற வேண்டிய கடமை உணர்வோடு ஒவ்வொரு நொடியும் திகழ வேண்டும். பணியில் இருக்கும்போது பலர் உங்களைத் தவறான வழிக்குத் தூண்டுபவர்களாக இருப்பார்கள். எந்தவிதமான சபலத்திற்கும் ஆட்பட்டுவிடாமல் நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடைபோட வேண்டியது உங்களுடைய கடமை.

இந்திய ஆட்சிப் பணியிலோ, மற்ற குடிமைப் பணியிலோ நீங்கள் பணியாற்றும்போது மக்களை நேசிப்பது மிகவும் முக்கியம். அவர்களுக்காகத்தான் நாம் பணியாற்றுகிறோம் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளியாமல் அவை கிளம்பும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தீர்த்து வைப்பதுதான் நல்ல நிர்வாகத்திற்கு அழகு''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x