நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளனவா என, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க கடற்கரைகள், அபாயகரமான குளங்கள் மற்றும் அருவிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், 24 மணி நேரமும் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்புக் குழுவைப் பணியமர்த்த வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோட்டீஸ்வரி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (அக். 01) விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுகுறித்து பதில் அளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கைகளை அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த நீதிபதிகள், இவற்றைச் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in