நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவா?- தஞ்சாவூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவா?- தஞ்சாவூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்
Updated on
1 min read

நெல் விற்பனை செய்ய விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற தமிழக அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இன்று விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இதில் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, விவசாயிகள் கழுத்தில் நெல் முடிச்சுகளைத் தொங்கவிட்டும், அலுவலகம் முன்பு தரையில் படுத்தும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அப்போது விவசாயிகள், ’’குறுவை அறுவடை தொடங்கி 10 நாட்களாக ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த நெல் முட்டைகளைக் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதே நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய வேண்டுமென்றால் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற புதிய நடைமுறை விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. எனவே, இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

அதே நேரத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நெல்லை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வதால் ஆன்லைன் பதிவு நடைமுறையைக் கொண்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகள், ’’ஊழல் முறைகேடுகளுக்குக் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் துணை போவதால் அதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்படும் இந்தத் திட்டத்தை உடனடியாகத் தமிழக அரசு கைவிட வேண்டும்’’ எனப் போராட்டத்தில் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in