

பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செண்டை மேளம், பட்டாசு, ரோஜாப்பூ மாலை என்றெல்லாம் களைகட்டியது.
மக்கள் நலக்கூட்டணி சார்பில் தமிழகத்தில் தென்மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் 4 கட்டமாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டிருந்தன. இக் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டிருந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தை இக்கூட்டங்களில் அக்கூட்டணி கட்சி தலைவர்கள் விளக்கியிருந்தனர்.
தேமுதிக இந்த கூட்டணியில் இணைந்தபின் 5-வது கட்ட பிரச்சாரம் நேற்றுமுன்தினம் நாகர்கோவிலில் தொடங்கியது. நேற்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க திடலில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
மேடையின் கூரை கூட்டணி கட்சிகளின் கொடி நிறங் களில் ஆன பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தலைவர்களை வரவேற்கும் பேனர்கள் மைதானத்தைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்தன. மார்க்கெட் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி செண்டை மேளம் முழங்க, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இயற்கை ஒத்துழைப்பு
வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் காணப்பட்டதை சுட்டிக்காட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், `இயற்கை ஒத்துழைக்கிறது, நமது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கிறது’ என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும்போது, வைகோவின் குருநாதர், மூத்த அரசியல் தலைவர், அரசியல் சாணக்கியர் கருணாநிதி, `பழம் நழுவி பாலில் விழும்’ என்றார். ஆனால், `பழம் நழுவி விஷப்பாலில் விழாது’ என்று வைகோ தெரிவித்திருந்தார். கடைசியில் சீடர் வெற்றி பெற்றார், குருநாதர் தோல்வி அடைந்தார் என்றார்.
பெயர் மறதி
தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் பேசும் போது கட்சி தலைவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பெயரை மறந்து ஒருசில வினாடிகள் அப்படியே நின்றார். பின்னர் ஞாபகம் வந்து பெயரைச் சொன்னார்.
கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளதை அவர் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஆணையத்தை அவர் தவறான வார்த்தையால் அர்ச்சித்தபோது மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 பவுன் மோதிரம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதை அடுத்து, மேடையில் திருமாவளவனுக்கு 2 பவுன் மோதிரத்தை வைகோ அணிவித்து மகிழ்ந்தார். அதேநேரத்தில் திருமாவளவனுக்கு மோதிரம் அணிவிக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கார்த்திக் தடுக்கப் பட்டார். மோதிரத்தை விரலில் மாட்டிக்கொண்ட பின் பேசிய திருமாவளவன், `அண்ணன் தம்பி உறவு தொடரும் என்பதை வார்த் தையால் அல்ல, செயலில் வைகோ காட்டியுள்ளார்.
வெற்றியை முன்னறிவிக்கும் வகையில் அவர் மோதிரத்தை அணிவித்துள்ளார். தேர்தலுக்குப்பின் கூட்டணியின் மற்ற தலைவர்களுக்கும் மோதிரம் அணிவிக்கப்படும்’ என்று அறிவித்தார்.
கூட்டத்தில் மோதிரம் அணிவிக் கப்பட்டதை நெகிழ்வான சம்பவம் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
வைகோவின் வருத்தம்
வைகோ பேசும்போது, `பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் தான் படித்த அனுபவங் களை பகிர்ந்து கொண்டார். அப்போதைய கல்லூரி முதல்வர் அருள்தந்தை சூசையின் பெயரை பலமுறை குறிப்பிட்டார்.
சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்படுவது குறித்து தான் அளித்த பேட்டியை சில முக்கிய பத்திரிகைகள் வெளியிடவில்லை என்பது குறித்து வருத்தம் தெரிவித்த வைகோ, அந்த பத்திரிகைகளின் பெயர்களை வெளிப்படையாகக் கூறினார். தொண்டர் படையை உருவாக்கியது, தனது தாயார் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும் வைகோ பேசினார்.
மேடையில் அவருக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் பிரம்மாண்டமான ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது.