Published : 01 Mar 2016 05:40 PM
Last Updated : 01 Mar 2016 05:40 PM

கட்டி முடிக்கப்படாத மேம்பாலங்களை ஜெ. திறந்துவைப்பது மக்களை ஏமாற்றும் முயற்சி: அன்புமணி குற்றச்சாட்டு

கட்டி முடிக்கப்படாத மேம்பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைப்பது மக்களை ஏமாற்றும் முயற்சி என்று பாமக இளைஞரணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டவிருப்பதாக நாளிதழ்களில் பக்கம்பக்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஐந்து ஆண்டுகளாக உறங்கி விட்டு கடைசி நேரத்தில் வேகமாக செயல்படுவது போன்ற மாயை ஏற்படுத்துவதற்கான இம்முயற்சி வெற்றி பெறாது.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் ரூ.141 கோடியில் கட்டப்பட்ட பாலங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைப்பதுடன், ரூ.1355 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதாகவும் ஒரு விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பணி முடிந்ததாக கூறப்படும் பாலங்களில் பெரும்பாலானவை இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.

உதாரணமாக சென்னை அண்ணா வளைவு பகுதியில் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை ஜெயலலிதா இன்று திறந்து வைப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது மக்களை ஏமாற்றும் முயற்சி ஆகும். உண்மையில் சென்னை அண்ணா வளைவு பகுதியில் அமைக்கப்படும் பாலத்தின் மதிப்பு ரூ.117 கோடி ஆகும். இது கட்டி முடிக்கப்பட்டால் சென்னை மாநகரின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்றாக இருக்கும். இந்த பாலம் 3 எல்(L) வடிவ பிரிவுகளைக் கொண்டதாகும்.

இவற்றில் முதல் பிரிவு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தொடங்கி சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் செல்லும் பாதையையும், அண்ணா நகர் சாந்தி காலணி செல்லும் சாலையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படும்; இரண்டாவது பிரிவு அண்ணாநகர் மூன்றாவது நிழற்சாலையில் தொடங்கி கோயம்பேடு செல்வதற்கான பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும்; மூன்றாவது பிரிவு நெல்சன் மாணிக்கம் சாலையில் தொடங்கி பூந்தமல்லி சாலையில் அண்ணா வளைவு அருகில் நிறைவடையும் என்று இந்த பாலம் தொடர்பாக முந்தைய திமுக ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் 5.9.2012 அன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையிலும் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், இவற்றில் நெல்சன் மாணிக்கம் சாலை- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் மூன்றாவது பிரிவு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அதை மட்டும் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட தனிப் பாலமாக காட்டி திறப்பு விழா நடத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா.

2010 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த பாலத்திற்கான பணிகளை 2011 ஆம் ஆண்டில் தமிழக அரசு தொடங்கியிருந்தால் 2013 ஆம் ஆண்டில் பாலத்தை திறந்திருக்கலாம். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காத அரசு, இப்போது அவசர, அவசரமாக பாலத்தை திறந்து மக்களை ஏமாற்ற முயல்கிறது.

அதேபோல், திருச்சி பொன்நகர் தொடர்வண்டி மேம்பாலமும் அரைகுறையாகக் கூட கட்டி முடிக்கப்படாத நிலையில் தான் திறக்கப்படுகிறது. இந்த பாலத்தின் திட்ட மதிப்பு ரூ.86 கோடி ஆகும். பொன்நகரில் தொடங்கி 3 பிரிவுகளாக பிரிந்து மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொன்நகர் - தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றை இணைக்கும் பிரிவின் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அதை ரூ.34.24 கோடியில் கட்டப்பட்ட தனிப்பாலமாக காட்டி இன்று திறப்பு விழா நடக்கிறது. அதேபோல், காட்டுப்பரமக்குடி தொடர்வண்டி மேம்பாலம் உள்ளிட்ட மேலும் பல பாலங்களும் முழுமையாக இன்னும் பணிகள் முடிவடையாத நிலையில் இன்று அவசர, அவசரமாக திறந்து வைக்கப்படுகின்றன.

அதேபோல் அடிக்கல் நாட்டப்படவுள்ள மதுரை நான்கு வழி சுற்றுச் சாலை, வண்டலூர் - வாலாஜா சாலையை 6 வழித்தடமாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டவை. அவற்றுக்கான பணிகளை அப்போதே தொடங்காத ஜெயலலிதா, இப்போது அந்த பணிகளை தொடங்கிவிட்டதாக காட்டுவதற்காக அடிக்கல் நாட்டுகிறார்.

புதுக்கோட்டை மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதும் வீண் விளம்பரம் தான். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பு முந்தைய ஆட்சியில் 12.01.2011 அன்றும், கரூர் மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பு 12.08.2014 அன்றும் வெளியிடப்பட்டன. கரூர் மருத்துவக் கல்லூரி வரும் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று இதே ஜெயலலிதா தான் சட்டப்பேரவையில் அறிவித்தார். அடுத்த கல்வியாண்டு தொடங்க இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புதிய மருத்துவக் கல்லூரியை கட்டி தொடங்குவது எவ்வாறு சாத்தியம்? என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதி 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே தயாராகி விட்டது. ஆனால், அப்போது ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்ததால், அதன் தொடக்க விழாவை தமிழக அரசு திட்டமிட்டே தாமதப்படுத்தியது. அவ்வழக்கிலிருந்து விடுதலையாகி, மீண்டும் முதல்வர் ஆன பிறகு 9 மாதங்கள் தாமதமாக ஜூன் 29 ஆம் தேதி தான் மெட்ரோ ரயில் சேவையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமக்காக ஒரு திட்டத்தை பல மாதங்கள் தாமதப்படுத்திய ஜெயலலிதா இப்போது தேர்தல் பயம் காரணமாக முடிக்கப்படாத திட்டங்களையெல்லாம் தொடங்கி வைக்கிறார். இத்தகைய மாய்மாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. வரும் தேர்தலில் ஜெயலலிதாவை மக்கள் வீழ்த்தப் போவது உறுதி. மே மாதம் வெளியாகும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இதை நிரூபிக்கும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x