Published : 01 Oct 2021 09:04 AM
Last Updated : 01 Oct 2021 09:04 AM

கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர்

கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் "கரூர் மாவட்டம் முழுவதுமே, நேற்று இரவு முதலே பரவலாக கனமழை பெய்துள்ளது. இப்போதும் மழை பெய்துவருகிறது. ஆனால் சற்று மிதமான அளவில் மழை பெய்கிறது. காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 80 மிமீ மழையும் குறைந்தபட்சமாக 20 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் மழை நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வருவாய்த் துறையினருடன் இணைந்து மழை பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கரூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரூர் மாவட்டத்தில் தோகைமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், மாயனூர் குளித்தலை, அணைப்பாளையம் உள்ளிட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்றிரவு இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. குளித்தலை கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் நேற்று புகுந்தது.

கரூர், குளித்தலை, பள்ளபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதகிளில் இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில் இன்று (அக். 1ம் தேதி) காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே போல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்களில் மாணவ, மாணவிகள் காலை முதலே புறப்பட்டு சென்றனர். சைக்கிள், நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் குடைபிடித்தப்படியும். மழையில் நனைந்தப்படியும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் தொடர்மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக். 1ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மழைப்பதிவு நிலவரம்:

கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விபரம். மி.மீட்டரில்.

தோகைமலை 80, அரவக்குறிச்சி 64.60, க.பரமத்தி 59.60, கிருஷ்ணராயபுரம் மற்றும் மாயனூர் தலா 44, குளித்தலை 37, அணைப்பாளையம் 36, கடவூர் 21, பஞ்சப்பட்டி 20, பாலவிடுதி 16.30, கரூர் 16, மைலம்பட்டி 10 என மொத்தம் 448.50 மி.மீட்டரும், சராசரியாக 37.28 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு:

15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வானிலை ஆய்வு மைய அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக அக்.1 முதல் 4-ம் தேதிதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டாமாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 1-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அக்.2 முதல் 4 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் " என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x