Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM

தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை இன்று முதல் அமல்: தென்மாவட்ட ரயில்கள் உட்பட 132 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

சென்னை

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணைஇன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி 132 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்களின் நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்ஜூலை மாதங்களில் ரயில்களின் காலஅட்டவணை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புதிய காலஅட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சென்னை எழும்பூர் - மதுரை (06158/06157), திருப்பதி - ராமேசுவரம் (06779/06780), திருநெல்வேலி - தாதர் (01022/01021), விழுப்புரம் - மதுரை (06867/06868), கோயம்புத்தூர் - நாகர்கோவில் (02668), நாகர்கோவில் - கோயம்புத்தூர் (06321/06322), புதுச்சேரி - கன்னியாகுமரி (06861/06862), நாகர்கோவில் - சென்னை எழும்பூர் (06064/06063), சென்னைஎழும்பூர் - புதுச்சேரி (06025/06026), சென்னைஎழும்பூர் - திருச்சி (02653/02654), தஞ்சாவூர் -சென்னை எழும்பூர் (06866), நாகர்கோவில் - தாம்பரம் (06066/06065), சென்னை எழும்பூர்- மதுரை - (02635/02636), சென்னை எழும்பூர் -திருநெல்வேலி (02635/02636), சென்னை எழும்பூர் - செங்கோட்டை (06181/06182), சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் (02673),சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் (02839) உட்பட மொத்தம் 132 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய காலஅட்டவணை இன்று (அக்.1) முதல் அமலாகிறது. பெரும்பாலான விரைவு ரயில்களின் நேரத்தில் 5 முதல் 10நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படுவது போல், தொடர்ந்து சிறப்பு ரயில்களாக இயக்கப்படும். வழக்கமான விரைவு ரயில்களின் சேவை தொடங்கும்போது, இந்த கால அட்டவணையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

செல்போன் மூலம் தகவல்

ரயில் முனையங்களில் இருந்து புறப்படும்ரயில்களின் நேரம் மாற்றம் மற்றும் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் செல்போன்களுக்கு ரயில்களின் நேரம் மாற்றம் குறித்து குறுந்தகவல் அனுப்பியுள்ளோம். மேலும், நேரம் மாற்றம் குறித்து விபரங்களை ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போதிய ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றனர்.

பயணிகள் ஏமாற்றம்

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை ஒரு நாளுக்கு முன்பு அறிவித்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 130-க்கும் மேற்பட்ட ரயில்களின் நேர மாற்றத்தை அவசர, அவசரமாக அறிவிப்பது ஏன்? முன்கூட்டியே ரயில்களின் நேரம் மாற்றம் குறித்துஅறிவிப்பு வெளியிட்டால்தானே பயணிகள் திட்டமிட்டு பயணிக்க முடியும். மேலும், விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு, ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் உள்ளிட்டவை குறித்து எதுவும் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x