விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தல்

விடுதலைப் போராட்ட வீரர் பி.சீனிவாச ராவ் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவரது படத்துக்கு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.படம்: க.ஸ்ரீபரத்
விடுதலைப் போராட்ட வீரர் பி.சீனிவாச ராவ் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவரது படத்துக்கு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.படம்: க.ஸ்ரீபரத்
Updated on
1 min read

விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பி.சீனிவாச ராவ் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அவரது படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் எம்எல்ஏ நா.பெரியசாமி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று சீனிவாச ராவ் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் நல்லகண்ணு கூறியதாவது:

பி.சீனிவாசராவ், கர்நாடகாவில் பிறந்து, உயர்கல்விக்காக சென்னை வந்தவர். அந்தக் காலத்தில் தேச விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்து வந்ததால், படிப்பை துறந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 3 வேளாண் வணிகசட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை உரிமையை பறித்து விட்டது. மின்சார திருத்த சட்டமும் விவசாயிகளுக்கு விரோதமானது.

மத்திய அரசின் புதிய சட்டங்களை எதிர்த்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் 10 மாதங்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளைப் பாதிக்கும் இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். எனவே, அந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். நம் அரசியலமைப்பு சட்டம் எந்த மதத்தையும் சார்ந்து அமையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in