

தேனியைச் சேர்ந்த சிவகுமார் தனது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிப்பதாக தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் தலைமையில் உறுப்பினர்கள் குமரேசன், பிரதாப்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மனுதாரர் சிவகுமார், தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.செந்தில்வேல்முருகன், தேனி கல்வி மாவட்ட அலுவலர் ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு ஆணையத்தின் பரிந்துரைப்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மேலும் தற்போது கரோனா தொற்று காரணமாக, தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியபடி இக்கட்டணத்தில் 85 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதையும் 6 தவணைகளாக மாணவர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் அரசு நிர்ணயித்த கட்டண விவரத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களது அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்றும் அதனைமுதன்மைக் கல்வி அதிகாரி மற்றும்மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் இந்த நடைமுறையைப் பின்பற்றும்படி சுற்றறிக்கை அனுப்புவதுடன், அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.