

தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (78). மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், சிமென்ட் மற்றும்உரங்களை பேக்கிங் செய்வதற்கான பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கினார். பின்னர், தொழிற்சாலைப் பொறுப்பை சகோதரரிடம் கொடுத்துவிட்டு, 100 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். விளைபொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துகிறார். சீரகச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் உயரிய மா, வாழை ரகங்களை சாகுபடி செய்து, இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்கிறார்.
இதுகுறித்து, ஈஸ்வரன் மேலும் கூறியதாவது: கடந்த 1976 முதல் விவசாயம் செய்து வருகிறேன். நெல் சாகுபடியில் வருவாய் கிடைக்கவில்லை. பெரும்பாலும் நஷ்டம் ஏற்படும். இதனால், 20 ஏக்கரில் நெல் சாகுபடியும், எஞ்சிய 80 ஏக்கரில் மரப்பயிர்களையும் சாகுபடி செய்துள்ளோம். ஒட்டு மா, தேக்கு, கொய்யா, நெல்லி, பலா உள்ளிட்ட பணப்பயிர்களை சாகுபடி செய்யத்தொடங்கினேன். தென்னந்தோப்பில் ஊடுபயிராக வாழை ரகங்களை சாகுபடி செய்துள்ளேன். சீரகச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் சாகுபடி செய்து வருகிறேன்.
மா சாகுபடி
உயர் விளைச்சல் மற்றும் அதிக விலை கிடைக்கக்கூடிய மா ரகங்களை மட்டுமே தேர்வு செய்து சாகுபடி செய்கிறேன். பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்ய பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் ஆகியவற்றை சொந்தமாக தயாரிக்கிறோம். இதற்காக ஏராளமான மாடுகளும் வளர்த்து வருகிறோம். மா ரகங்களை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்கிறேன்.
தேக்கு மரக்கன்றுகள் பயன்அளிக்க பல ஆண்டுகள் ஆகும். எனவே, அவற்றை நிலங்களில் வேலி பயிராக சாகுபடி செய்யலாம். ஒட்டு மாங்கன்றுகள் 3 ஆண்டில் பயன் அளிக்கும். அதுவரை மா மரக்கன்றுகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அதனால், மா மரக்கன்றுகளுக்கு இடையே ஊடுபயிராக வாழை சாகுபடி செய்துள்ளேன்.
மா மரக்கன்றுகளை நாங்களே ஒட்டு முறையில் உற்பத்தி செய்கிறோம். இதனால், செலவு குறைகிறது. இமாம் பசந்த், அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, குஜராத்தைச் சேர்ந்த கேசர், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தசரி போன்ற உயர்ந்த மா ரகங்களை மட்டுமே சாகுபடி செய்கிறோம். இந்த ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யலாம்.
3-வது ஆண்டில் விளைச்சல் கிடைக்கத் தொடங்கினாலும், 5-வது ஆண்டில் மாம்பழங்களின் அப்போதைய விலையைப் பொறுத்து, ஏக்கருக்கு பல லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும். பழப்பயிர்கள் சாகுபடிக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வேலையாட்களும் அதிகமாக வேண்டியது இருக்காது. வருமானமும் அதிகம் கிடைக்கும்.
மா அறுவடை பருவத்துக்கு வந்த பின்னர் ஊடுபயிர் சாகுபடி செய்யக் கூடாது. அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 75 சதவீத நிலத்தில் இயற்கை முறையில் பழமரங்களை வளர்க்கலாம். மா மரங்களை உயரமாக வளர விடாமல் கவாத்து செய்து, படர்ந்து வளரச் செய்கிறேன். இதனால், பெண்களே எளிதாக மாங்காய்களை அறுவடை செய்துவிடலாம். கொய்யா சாகுபடி மிகவும் லாபகரமான விவசாயம். தைவான் பிங்க், தைவான் ஒயிட் போன்ற கொய்யா ரகங்கள் நன்கு கைகொடுக்கும். எங்கள் தொழிற்சாலையில் உள்ள காலியிடங்களில் தேக்கு வைத்துள்ளோம். வீட்டைச் சுற்றிலும் தேக்கு, மா உள்ளிட்ட 500 மரங்களை வளர்த்து உள்ளோம். இதனால் வீடு குளுமையாக உள்ளது என்றார்.