தேர்தல் பயன்பாட்டுக்கு அல்லாத பணத்தை உடனடியாக திருப்பியளிக்க வேண்டும்: மாவட்டந்தோறும் குழு அமைத்து தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பயன்பாட்டுக்கு அல்லாத பணத்தை உடனடியாக திருப்பியளிக்க வேண்டும்: மாவட்டந்தோறும் குழு அமைத்து தேர்தல் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் பிடிபடும் பணம், தேர்தல் பயன்பாட்டுக்கானது அல்ல என தெரிந்தால், உடனடி யாக திருப்பியளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும், ஆயிரத்து 402 பறக்கும் படைகள், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கடுமையான வாகன சோதனை நடத்தப்பட்டு, அவை வீடியோ பதிவும் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று வரை, ரூ.37 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் சிறு சிறு தொகையாக அதிகளவில் பிடிபட்டுள்ளது.

இந்நிலையில் பிடிபடும் தொகையில் தேர்தலுக்காக பயன்படுத்தாதவற்றை உடனடி யாக சம்பந்தப்பட்டவரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறி விக்கை அனுப்பியுள்ளது. அதில், பணத்தை உடனடியாக திருப்பியளிப்பது தொடர்பாக குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை பிடிபட்டுள்ளது. பிடிபடும் பணம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில், மாவட்ட கருவூல அதிகாரி மற்றும் தேர்தல் செலவின அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இக்குழு, பிடிபட்ட பணம், தேர்தலுக்காக செலவிடுவதற்கு எடுத்துவரப்பட்டதா என்பதை ஆய்வு செய்து, இல்லை என்றால் உடனடியாக சம்பந்தப்பட்டவரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பிடிபட்ட பணத்தை திரும்பப் பெற சம்பந்தப்பட்டவர் இனி முறையீடு செய்ய வேண்டியதில்லை. புதிதாக அமைக்கப்படும் குழுவே தானாக முன்வந்து விசாரணை நடத்தி பணத்தை திருப்பி அளிக்கும். இதில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகை பிடிபட்டால், வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in