

பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர்காமாட்சி நினைவு மருத்துவமனையில் இதுவரை 350-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச இதயமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இலவச சேவையை மேற்கொள்ள ‘பிஞ்சு இதயங்களைக் குணப்படுத்துவோம்’ என்ற திட்டத்தை நடத்திவரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டியுடன் இம்மருத்துவமனை கைகோர்த்துள்ளது.
இந்த கூட்டிணைவின் தொடக்க விழா, சர்வதேச இதய நாள் விழிப்புணர்வு தினமான நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அர்விந்த் ரமேஷ், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். இதுவரை இலவச இதய சிகிச்சை பெற்ற ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மறு ஆய்வுகள் இந்நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்டன.
டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இதய நோய் மருத்துவ சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர் ஆர்.பிரேம் சேகர் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு பிறவியில் ஏற்படும் இதயக் கோளாறே காரணம். இப்பிரச்சினையை விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் அவர்கள் மற்ற பிள்ளைகளைப் போலஆரோக்கியமாக வாழ முடியும்.
இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இதயத்தை திறக்காமலேயே நுண்துளையிட்டு சிகிச்சை அளிக்க முடியும். இதனால் குழந்தைகளுக்கு மயக்க மருந்து அளிப்பது, புதிய ரத்தம் செலுத்துவது, தழும்பு உண்டாவது தவிர்க்கப்படும். அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கையும் குறையும். மருத்துவ செலவும் மூன்றில் ஒரு பங்காக குறையும்.
இங்கு தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவத் திட்டத்தின் மூலமும் தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்கிறோம். மெட்ராஸ் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் மூலம் நடத்தப்படும் ‘பிஞ்சு இதயங்களைக் குணப்படுத்துவோம்’ திட்டத்தின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை பெறலாம்” என்றார்.