

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் நீதிமன்றத்தை நாடியதும் காணொலியில் விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிய புதுச்சேரி அதிகாரி ஓய்வு பெறும் நாளான இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுவை கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனராக இருந்த பத்மநாபன், அத்துறையின் இயக்குனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு, பத்மநாபன் மீது, அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக உள்ளூர் விசாரணை குழு, விசாரணை நடத்தியது. இந்த குழு முன்பு ஆஜராகி 27 பெண்கள் சாட்சியம் அளித்தனர்.
ஆனால் புகார் குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் தர கடிதம் அனுப்பப்பட்டும் பத்மநாபன் வரவில்லை. அதிகாரி பத்மநாபன், பெண் டாக்டருடன் பேசியதாக கூறப்படும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து அவரது பேச்சு அடங்கிய பாலியல் துன்புறுத்தல் ரீதியிலான ஆடியோ பதிவுகளும் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து புகார் குழு விசாரிக்க தடைக்கோரி பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இச்சூழலில் பத்மநாபன், அரசு நிறுவனமான ’பாண்கேர்’ துறைக்கு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், நேற்று அவசர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பாலியல் புகார் தெரிவித்திருந்த கால்நடை துறை முன்னாள் இயக்குனர் பத்மநாபன், தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் செப்.30ம் தேதியுடன் (இன்று) ஓய்வு பெற உள்ளதால், அவசர வழக்காக எனது மனுவினை எடுத்து விசாரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து வழக்கு காணொலி வாயிலாக உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் புகாருக்கு உள்ளான பத்மநாபனை பணியிடைநீக்கம் செய்ய தலைமை செயலர், துறை செயலருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இன்று பணி ஓய்வு பெறும் நாளில், பத்மநாபன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.