

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்குத் தேவையான நிதியைக் கடந்த அதிமுக ஆட்சியில் முறையாகப் பெறவில்லை. தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதியைத் தர மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள், தொழில்துறை ஆகியவற்றின் சார்பில், தகுந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (30-ம் தேதி) நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை வகித்து மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.35.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர், அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி, படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற மருத்துவ நடவடிக்கைகளையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் விரைவாக மேற்கொண்டதால் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும், தமிழக முதல்வர் புதிய திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அறிவித்த ’வருமுன் காப்போம்’ திட்டத்தை, மீண்டும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும். வடகிழக்குப் பருவ மழைக்காலம் நெருங்குவதால், தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க, மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் சீரமைப்பு மற்றும் தூர்வாரும் பணிகள், மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை முன்னரே கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10 வருடங்களைக் கடந்து பணியில் இருக்கும், வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பணியை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனித - வன விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, கால்வாய் அமைப்பது, சோலார் அமைப்பது குறித்து அறிக்கை தயாரிக்குமாறு மாவட்ட வாரியாக வன அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை வந்தவுடன் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்குத் தேவையான நிதியைக் கடந்த அதிமுக ஆட்சியில் முறையாகப் பெறவில்லை. எனவே, தமிழகத்துக்குத் தேவையான நிதியில் இருந்து, பசுமை இயக்கத் திட்டத்தில் ரூ.1000 கோடி, நபார்டு வங்கி திட்டத்தில் ரூ.147 கோடி உட்பட ரூ.2 ஆயிரம் கோடி தொகையைத் தருமாறு டெல்லிக்குச் சென்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்’’.
இவ்வாறு அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும், முன்னாள் திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.