

ஆளும் கட்சியின் கைப்பாவை போல செயல்படுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தக் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இரவு சென்றார். அங்கு கட்டிடப் பணிகளைக் கண்காணித்த பிரதமர் மோடி ஒரு மணி நேரம் வரை இருந்து அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தார். கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ''சொல்வதற்கு ஒன்றுமில்லை. நமக்குத் தகுதியான அரசே நமக்கு கிடைக்கும்'' என்று பதிவிட்டிருந்தார். அத்துடன் பிரதமர் மோடியைப் புகைப்படம் எடுக்க ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு கேமராவை உயர்த்தியது போன்ற புகைப்படத்தை அவர் இணைத்திருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் கைப்பாவை போல செயல்படுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்களின் ட்வீட் மூலம் பொய்களைத் திணிப்பதற்கு உங்களுக்கு அவமானமாக இல்லையா?
உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப போலி செய்திகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறீர்கள் என்றாலும் நம்முடைய பிரதமர் மற்றும் தமிழக பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது'' என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதேபோல போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம், உண்மையான புகைப்படம் என்று இரண்டு புகைப்படங்களையும் அண்ணாமலை இணைத்துள்ளார்.