

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகள் குறித்து, நாளை விளக்கமளிக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்குத் தடை விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
புதுச்சேரியில், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப். 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகள், சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், சுழற்சிமுறை ஒதுக்கீடு என்பது இரண்டு முறை மட்டுமே வழங்கப்படும் என்பதால், இதில் தவறுகள் உள்ளதாகவும், இது சம்பந்தமான விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது விதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அரசாணையின் அடிப்படையில் இருக்கக் கூடாது என தெரிவித்த தலைமை நீதிபதி, வார்டு ஒதுக்கீடு பல குறைபாடுகள் உள்ளதாகவும், அது குறித்து பதிலளிக்காவிட்டால், தேர்தலுக்குத் தடை விதிக்க நேரிடும் எனவும் கூறி, இதுசம்பந்தமாக நாளை விளக்கமளிக்க புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.