

மேன்மையான மாணவ சமுதாயம் உருவாக தமிழக அரசு விரைவாக வழிகாண வேண்டும் என, மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (செப். 30) வெளியிட்ட அறிக்கை:
"சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து பெரம்பூர் நோக்கிய வழித்தடத்தில் நேற்று (செப். 29) மாலை சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்து தடம் எண் 29A, தாசப்பிரகாஷ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது, அதில் ஏறிய மாணவர்கள் சிலர் படிகட்டுகளில் பயணம் செய்ததோடு மட்டுமன்றி, மேற்கூரையிலும் ஏறினர். இதனால் பொதுமக்கள் பலர் பெரும் அவதியுற்றனர்.
மாணவர்களின் செயல்பாடுகளை ஓட்டுநர் மோகனகிருஷ்ணன் கண்டித்து, தன் கடமையைச் செய்துள்ளார். இதனால் மாணவர்கள் ஓட்டுநர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த நிகழ்வை, நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
கல்வி கற்கச் செல்லும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளில் ஒழுக்கத்தைக் கற்கவேண்டிய மாணவச் சமுதாயத்தினர் சிலரின் ஒழுக்கக்கேடான செயல்களால் அவர்கள் தடம் மாறிச் செல்வதை அரசும், காவல்துறையும் கண்காணிக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களின் நடவடிக்கைகளையும் ஒழுக்கத்தையும் தீவிரமாக மேற்பார்வையிட வேண்டும்.
மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பியதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், அவர்களின் நன்னடத்தைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
கல்வித்துறையும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கின்ற வகையிலான நன்னெறிப் பாடங்களையும், மாணவர்களை மனரீதியாக அமைதிப்படுத்தி, நல்வழிப்படுத்துகின்ற வகுப்புகளையும் பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக்க வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேன்மையான மாணவச் சமுதாயம் உருவாக, விரைவாக வழி காண வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.