

தமிழக அரசுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதாவே செயல்படுகிறார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சனிக்கிழமை புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராஜராமன் ஆகியோர் 16 பக்க அளவில் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
''ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.
ஊழலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தி வருகிறது. இவ்வழக்கை தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையே கண்காணித்து வருகிறது. ஆனால் தமிழக முதல்வரான ஜெயலலிதா, ஊழலுக்கு எதிரான வழக்கை முடக்க முயன்று வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை வாங்கியதன் மூலம் அரசு பொறுப்பை அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி டி'குன்ஹா, ''உச்ச நீதிமன்றம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் அதி காரம் மட்டுமே வழங்கி இருக்கிறது. அந்த வழக்கு தொடர்புடைய கிளை வழக்குகளை விசாரிக்க எனக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறதா' எனத் தெரியவில்லை.
இருப்பினும் இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரம் குறித்து உங்களுடைய (டிராபிக் ராமசாமி) விரிவான விளக்கத்தை எழுத்துபூர்வமாகவும் வாதத்தின் மூலமாகவும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.