Last Updated : 30 Sep, 2021 12:24 PM

 

Published : 30 Sep 2021 12:24 PM
Last Updated : 30 Sep 2021 12:24 PM

தமிழகத்தில் ஐந்து இடங்களில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் ஐந்து இடங்களில் சிட்கோ தொழில்பேட்டை தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம், கருப்பூரில் உள்ள சிட்கோவில் நேற்று (செப். 29) நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக, சேலம் மகளிர் தொழில்நுட்ப பூங்காவில் தயாரிக்கப்பட்ட துணிகளை பார்வையிட்டும், ஆயுத்த ஆடை மற்றும் வடிவமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சேலம், கருப்பூரில் உள்ள சிட்கோவில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடலில் ஈடுபட்டு பேசியதாவது:

"தமிழகத்தில் கரோனா தொற்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடல், மன நலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கரோனா தொற்று காலத்தில் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகிய சூழலிலும், தொழில் ரீதியாக வெற்றி கண்டுள்ளமைக்கு பாராட்டுகள்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு வகுத்து நிறைவேற்றி கொடுத்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக ரூ.168 கோடி முதலீட்டு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க வரும் டிசம்பர் வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் தொடங்க இணைய வழியில் பதிவு செய்ய சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வான் வழி போக்குவரத்து, மின்சார உதிரி பாகம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஐந்து இடங்களில் சிட்கோ (தொழில்பேட்டை) தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைய, வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதிக்காக பத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ.240 கோடி முதலீட்டில் 2,045 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பதுடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் சார்ந்த ஜவ்வரிசி ஆலை, பிவிசி தயாரிப்பு, வெள்ளி கொலுசு தயாரிப்பு, எஃகு உற்பத்தி, விசைத்தறி, கைத்தறி சார்ந்த தொழில்களில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

எனவே, சேலம் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வளர்ச்சிக்காக திமுக அரசு உறுதுணையாக இருந்து, உங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடம் உங்கள் அரசாக செயல்படும் என உறுதி அளிக்கிறேன்".

இவ்வாறு அவர் பேசினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத் தலைவர் பொறியாளர் மாரியப்பன் பேசியதாவது:

"சேலம், காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம் செய்திட மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளமைக்கு நன்றிகள். சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் நன்கொடை மூலம் கடந்த 1988-ம் ஆண்டு விமான நிலையத்துக்காக 127 ஏக்கர் நிலம் ரூ.90 லட்சம் விலை கொடுத்து வாங்கி, வழங்கப்பட்டது.

இந்தியாவில் சேலம் மாவட்டம் மட்டுமே என்பதை பெருமைபட கூறிக் கொள்கிறேன். ராணுவ உதிரிபாகம் தயாரிக்க தனி துறையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்".

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன பிரதிநிதிகள் பேசும் போது, "விசைத்தறி தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்திட வேண்டும். மேலும், இயங்காமல் மூடப்பட்டுள்ள சேலம் கூட்டுறவு நூற்பாலையில் விசைத்தறியாளர்களுக்கு தொழில் மையம் அமைத்து கொடுக்க வேண்டும். வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கும், அந்த தொழில் சார்ந்தவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். சேலம் ஐ.டி. பார்க்கில் ஜவுளி பூங்கா மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் முன் வைத்துப் பேசினர்.

நிகழ்ச்சியில், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில் துறைச் செயலாளர் அருண்ராய், எம்.பி. பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x