

தருமபுரியில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர், சாலையோரம் நின்றிருந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களைப் பார்த்து காரை நிறுத்தி இறங்கிச் சென்று அவர்களிடம் பேசிச் சென்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தருமபுரி வந்துள்ளார்.
முன்னதாக இன்று காலை முதல் நிகழ்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் (CEmONC) உள்ளிட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதல்வர் வழங்கினார்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக கரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் செல்லும் வழியில் ஆட்டுக்காரன்பட்டி என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்று இயங்குகிறது. கிறிஸ்தவ மிஷனரி சார்பில் இயங்கும் பெண்கள் பள்ளி அது. அந்தப் பள்ளி பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளது.
முதல்வர் வருவதால் பள்ளியின் வாயிலை ஒட்டிய பகுதியிலேயே போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர், வாகனங்கள் புடைசூழ வருவதை வேடிக்கை பார்க்க அப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும் திரண்டிருந்தனர்.
முதல்வரின் கார் வருவதைக் கண்டு அவர்கள் கையசைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்க முதல்வர் ஸ்டாலின் காரை நிறுத்தச் சொன்னார். வாகனத்திலிருந்து இறங்கிச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் நலம் விசாரித்துச் சென்றார். இதனால், காத்திருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போதும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வெளியூர் பயணங்களின் போது இதுபோன்று வழியில் பொதுமக்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பொதுவாக வெளிநாட்டு குறிப்பாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் பொதுஇடங்களில் மக்களுடன் இதுபோன்று நெருங்கிப் பழகும் நிகழ்வுகளில் ஈடுபடுவதுண்டு. இதனை அங்கே கிரவுட் பாத் (Crowd Bath) என்றழைக்கின்றனர். இவ்வாறாக மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவது அரசியலுக்கு அவசியம் என்றும் கருதுகின்றனர்.