நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம்: கரோனா பாதிப்பில் இருந்து மீ்ண்டு வரும் ரியல் எஸ்டேட்

நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம்: கரோனா பாதிப்பில் இருந்து மீ்ண்டு வரும் ரியல் எஸ்டேட்
Updated on
1 min read

நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் கரோனா பாதிப்பில் இருந்து ரியல்எஸ்டேட் தொழில் மீண்டு வரு கிறது.

கரோனா பாதிப்பு, கட்டுமானத் தொழிலை வெகுவாகப் பாதித்தது. வீடு விற்பனை மந்தம், வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியது, பழைய வீட்டு வசதித் திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை விற்க முடியாததால், புதிய வீட்டு வசதித் திட்டங்களை தொடங்க முடியாத நிலை என பல்வேறு வழிகளில் சரிவைச் சந்தித்தது ரியல் எஸ்டேட் தொழில்.

கரோனா முதலாவது அலையில் செய்வதறியாமல் தவித்த கட்டுநர்கள், 2-வது அலையில் நிலைமையை சமாளிக்கக் கற்றுக் கொண்டனர். கரோனா ஊரடங்கில் இருந்து புதிய அரசு தளர்வுகள் கொடுத்தது, சொந்த ஊரில் இருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் திரும்பியது, வீடுகள் விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இப்போது கரோனா பாதிப்பில் இருந்து ரியல் எஸ்டேட் தொழில் மீண்டு வருகிறது.

இதுகுறித்து ‘கிரெடாய்' தமிழ்நாடு பிரிவு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:

மக்களின் செலவினம் குறைந்தது

கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால், திருமணம் போன்ற விசேஷங்கள், பண்டிகைக் காலங்களுக்கு மக்கள் வெளியூர் செல்வது, ‘மால்’ செல்வது, குடும்பத்துடன் சுற்றுலா செல்வது தடைபட்டு, வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவர்களின் சேமிப்பு அதிகரித்தது. மேலும், மாதச் சம்பளம் பெறுவோரும் தேவையற்ற செலவுகளைக் குறைத்து குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்ததைக் காண முடிந்தது.

அதேநேரம், பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வேலை செய்ததால் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக 2 படுக்கையறை வீட்டுக்குப் பதில் 3 படுக்கையறை வீடு வாங்கலாம் என்ற எண்ணம் நடுத்தர வர்க்கத்தினரிடம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதம் வரை குறைத்துள்ளன.

எதிர்காலத்தில் ஆன்-லைன் படிப்பு, ஆன்-லைனில் டியூசன் என பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் சூழல் நீடிக்கலாம் என்று கருதப்படுவதால், புதிய வீட்டில் படுக்கையறை அல்லது ஏதாவது ஒரு அறையில் படிக்கவும், ஆன்-லைனில் அலுவலக வேலை செய்வதற்கான பிரத்யேக வசதிசெய்து தரும்படியும் கோருகின்றனர். அதனால் புதிய வீட்டு வசதித் திட்டங்களில் அதற்கு முன்னுரிமை தருகிறோம்.

இந்த காரணங்களால், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வீடுகளுக்கான தேவைஅண்மையில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் ரூ.25 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இத்தகைய சூழலில், தமிழகத்தில் தற்போது பழைய வீட்டு வசதித் திட்டங்களில் 75 சதவீதமும், புதிய வீட்டு வசதித் திட்டங்களில் 25 சதவீதமும் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in