

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில், வாக்குப்பதிவை நடத்த மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் கோயம்பேட்டில் உள்ளமாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இணையவழியில் நேற்று நடைபெற்றது.
மாநில தேர்தல் ஆணையர்வெ.பழனிகுமார் தலைமையில்நடந்த இக் கூட்டத்தில் பதற்றமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அங்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்கூடுதல் காவலர்களை நியமித்தல், சோதனைச் சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பை ஏற் படுத்துதல், ரோந்து குழுக்களை அமைத்தல் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அக்.6-ம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில் 17 ஆயிரத்து 130 காவல்துறையினர், 3 ஆயிரத்து 405 ஊர்க் காவல் படையினர், 9-ம் தேதி நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 16 ஆயிரத்து 6 காவல்துறையினர், 2 ஆயிரத்து 867 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 39 ஆயிரத்து 408பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4-ம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 7-ம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியில் இருந்துஅழைத்து வரப்படும் அரசியல் கட்சிபிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும். வெளியேறாதவர்கள் மீது தேர்தல் விதிப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, காவல் துணைத் தலைவர் (நிர்வாகம்) எஸ்.பிரபாகரன், காவல் உதவி தலைவர் (தலைமையிடம்) எம்.துரை, சுகாதாரத் துறை இணை இயக்குநர் (கொள்ளை நோய் தடுப்பு) ப.சம்பத், முதன்மைத் தேர்தல் அலுவலர்கள் க.அருண்மணி (ஊராட்சிகள்), கு.தனலட்சுமி (நகராட்சிகள்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.