தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம்: ரூ.2.60 கோடி வருவாய் அரசு கணக்கில் சேர்ப்பு

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம்: ரூ.2.60 கோடி வருவாய் அரசு கணக்கில் சேர்ப்பு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட்டு, அதில்கிடைத்த ரூ.2 கோடியே 60 லட்சம் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம்விடும் அதிகாரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

அதன் முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் பொது ஏலம்விட்டு அரசு கணக்கில் சேர்த்திட மாநகர காவல்ஆணையர்களுக்கும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குற்ற வழக்கில் தொடர்புடைய, உரிமை கோரப்படாமல் இருந்த வாகனங்களை அதிகாரிகள் பொது ஏலம்விட்டனர்.

இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் 172 வாகனங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 135 வாகனங்கள், கரூர் மாவட்டத்தில் 207 வாகனங்கள், சேலம் மாவட்டத்தில் 103 வாகனங்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் 203 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதேபோல திருப்பூர் மாநகர காவல்துறையில் 117 வாகனங்களும், சேலம் மாநகர காவல்துறையில் 10 வாகனங்களும் என இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,222 இருசக்கர வாகனங்கள், 103 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் 26 என மொத்தம் 1,351 வாகனங்கள் ஏலம்விடப்பட்டுள்ளன. இதன்மூலம் கிடைத்த ரூ.2 கோடியே 60 லட்சம் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் தேங்கிக்கிடந்த வாகனங்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய்ஈட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாகனங்களை ஏலம்விட்ட காவல் ஆணையர்களையும், காவல் கண்காணிப் பாளர்களையும் டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in