முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் இந்திரகுமாரி வரை... ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர்கள்
ஊழல் வழக்கில் தண்டனை பெறும் அமைச்சர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் புலவர்இந்திரகுமாரியும் இணைந்துள்ளார்.
1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் ஆர். இந்திரகுமாரி.
இவரது கணவர் பாபு நடத்திவந்த ‘மெர்சி மதர் இந்தியா', 'பரணி சுவாதி' ஆகிய அறக்கட்டளைகளுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி நடத்துவதற்காக சமூக நலத் துறை ரூ. 15.45 லட்சம் வழங்கியது. ஆனால், அந்த நிதியைக் கொண்டு பள்ளிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த, எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் துறை முன்னாள் இயக்குநர் சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த புலவர் இந்திரகுமாரி, 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் நாட்றாம்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு வென்று, ஜெயலலிதாதலைமையிலான அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்ச ராகப் பொறுப்பேற்றார்.
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா, அமைச்சர்களாக இருந்த இந்திரகுமாரி, செ.அரங்கநாயகம், பொன்னுசாமி, செல்வகணபதி உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குகளும், வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்த வழக்குகளும் தொடரப்பட்டன.
வேட்டி-சேலை முறைகேடு
இலவச வேட்டி-சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலணி வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திரகுமாரி விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் அவர் 2006-ல் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தற்போது திமுக இலக்கிய அணிச் செயலராக இந்திரகுமாரி பொறுப்பு வகித்து வருகிறார்.
1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்ததால், இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தனர்.
அதேபோல, சொத்துக் குவிப்புவழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைத்தது. தீர்ப்பு வந்தபோது திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த செல்வகணபதியின் பதவி பறிபோனது.
1991-96 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மருங்காபுரி பொன்னுசாமிக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1991-96 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த இந்திரகுமாரிக்கும் ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
