

“மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறது” என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத் தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘நீட்' தேர்வு சமூகநீதியை நிலைநாட்டக் கூடியது. மன அழுத்தத்தால் மாணவர்கள் உயிர்இழந்து வரும் நிலையில், தமிழக அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ‘நீட்' தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அரசியல் செய்து வருகிறது. மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு திமுக அமைதியாக இருந்தாலேபோதும். தேர்தல் வரும்போதெல்லாம் ‘நீட்' தேர்வு தொடர்பாக பேசி திமுக ஆதாயம் தேடிக் கொள்கிறது. ‘நீட்' தேர்வை பெற்றோர், மாணவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை எதிர்ப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வைத்துள்ள திமுகவினர்தான்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசு, தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவர்களை கோயிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது. இந்த அரசு டாஸ்மாக் கடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட கோயில்களுக்கு தருவதில்லை. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி தர வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது தமிழக அரசு. மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் பிரதமர் படத்தைக் கூட வெளியிடாமல், மாநில அரசு தாமே செய்வதாக சொல்லிக் கொள்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, `திமுக ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும்’ என, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். முதல்வர் பேரவையில் பேசும்போது, வங்கிகளில் முறைகேடாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கிறார். நியாயப்படி பார்த்தால், முதலில் உதயநிதி ஸ்டாலின் மீதுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும் என்றார்.