

கோவை அன்னூர் ஒன்றியத்தில் 3-வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.கருப்புசாமியை ஆதரித்து கரியாம்பாளையம், பொகளூர், மூக்கண்ணூர், ஆம்போதி, அன்னூர் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 1.5 சதவீத வாக்குகளில்தான் நாம் ஆட்சியை இழந்துள்ளோம். மக்கள் நமக்குத்தான் மீண்டும் வாய்ப்பளிக்க இருந்தார்கள். ஆனால், திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டனர். 525-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கூறி திமுக வெற்றி பெற்றது. மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று மாணவர்களை ஏமாற்றினார்கள். அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து என்று திமுக அளித்த பொய் வாக்குறுதியால் தமிழகத்தில் மூன்று மாணவர்களை இழந்துள்ளோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை புறக்கணியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பிஆர்ஜி அருண்குமார், இளைஞரணி துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான டிகே.அமுல்கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.கிருஷ்ணகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு க.அசோகன், ஒன்றியச் செயலாளர்கள் அம்பாள் பழனிசாமி, சாய் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.l