

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி அணிக்கு தமாகா வந்தால் அக்கட்சிக்கான இடங்களை தேமுதிகவே பிரித்துக் கொடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் சென்னை வந்தார். கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்த அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, தேர்தல் பிரச்சாரம் குறித்து வைகோ ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேமுதிகவுடன் இணைந்துள்ள ம.ந.கூட்டணி 110 இடங்களில் போட்டியிட உள்ளது. இந்த 110 தொகுதிகளை எப்படி பிரித்துக்கொள்வது என்பது தொடர்பாக ம.ந.கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறோம். தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பிறகு, எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பதை இறுதி செய்வோம். இந்தப் பணிகள் வரும் 31-ம் தேதிக்குள் முடிவடையும். இதையடுத்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்கள் அணிக்கு தமாகா வந்தால், தனக்கான இடங்களில் இருந்து தேமுதிகவே அவர்க ளுக்கு இடங்களை ஒதுக்கிக் கொடுக்கும்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அதிமுக, எங்கள் அணியைக் கண்டு ஆடிப் போயுள்ளது. அதனால்தான், சரத்குமாரை திருப்பி அழைத்துப் பேசியுள்ளனர். இந்தத் தேர்தலில் அதிமுக எத்தனை கோடிகளை செலவு செய்தாலும், முடிவு அவர்களுக்கு பாதகமாகவே முடியும்.
ம.ந.கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தின் பிரதான பிரச்சினைகள் அதில் இடம்பெறும். திமுக தலைவர் கருணாநிதியைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் எனக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு வைகோ கூறினார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படுமா என்று ஜி.ராமகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி அணி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தமானபோதே, இதை தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி என அழைப்போம் என்றுதான் சொன்னோம். பொறாமை பிடித்த வர்கள் சிலர் வேண்டுமென்றே இப்பிரச்சி னையை கிளப்பி வருகின்றனர்’’ என்றார்.