

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே பேருந்து பற்றாக்குறையால் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணிக்கின்றனர்.
பூவந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் திருப்புவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.
பள்ளிகள் காலை 9 மணிக்குள் தொடங்கிவிடும் என்பதால் காலை 7.30 மணிக்கே மாணவர்கள் தயா ராகி பூவந்தி பேருந்து நிறுத்தம் வருகின்றனர். ஆனால், காலை 8 மணிக்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே திருப்பு வனம் செல்கிறது. அப்பேருந்தும் மேலூரில் இருந்து வருவதால், எப்போதும் கூட்டமாக இருக்கும். மேலும் அப்பேருந்தில் ஏறாவிட்டால் அடுத்த பேருந்து காலை 9 மணிக்குத்தான் வரும்.
இதனால் மாணவர்கள் காலை 8 மணி பேருந்திலேயே ஏறி பள்ளிக்குச் செல்கின்றனர். இடம் கிடைக்காததால் மாணவர்கள் பலர் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். சிலர் ஆட்டோக்களில் ரூ.15 கொடுத்து பயணிக்கின்றனர். இதனால் மாண வர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பூவந்தி மாண வர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் இருந்து திருப்புவனம் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆனால், ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் படிக்கட்டில் பயணிக்கும் நிலை உள்ளது. பஸ் பாஸ் இருந்தும் பலர் ஆட்டோக்களில் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதேபோல் மாலையிலும் பள்ளி விடும் நேரத்தில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் வருவதில்லை. இதனால் சிரமப்படுகிறோம் என்று கூறினர்.