

பசுமைக்குடிலில் தக்காளி பயிரிட்டு வருவாய் ஈட்டி வருகிறார் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர்.
மதுரை மாவட்டம், சோழ வந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ரா.கார்த்திக் (34). பொறியியல் முதுநிலை பட்டதாரியான இவர் சென்னையில் வேலை பார்த்தார். கரோனா ஊரடங்கால் வேலையை இழந்த இவர், சொந்த ஊரில் தற்போது பசுமைக்குடிலில் தக்காளி பயிரிட்டு வருகிறார்.
இதுகுறித்து ரா.கார்த்திக் கூறிய தாவது: எனது தாயார் முத்துக்குமாரி, அண்ணன் செந்தில்ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வருகிறேன்.
விவசாயம் செய்வதற்காக வாடிப்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறையினரை அணுகியபோது, 2019-ல் என் தாயார் முத்துக்குமாரி பெயரில் ரூ.4.68 லட்சம் மானியத்தில் பசுமைக்குடில் அமைத்து தந்தனர். தற்போது தக்காளியில் சாகு என்ற ஒட்டு வீரிய ரகம் பயிரிட்டுள்ளேன். பசுமைக்குடிலில் வளர்ப்பதால் பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.ஒரே சீதோஷ்ண நிலையில் சீரான வளர்ச்சி இருக்கிறது. அதிக மகசூல் தருகிறது. சொட்டுநீர்ப் பாசனத்தில் அமைத்துள்ளதால் தண்ணீர் பயன்பாடும் குறைவு.
தற்போது வாரத்தில் 2 முறை 15 பெட்டிக்கு குறையாமல் தக்காளி எடுத்து வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். தற்போதைய சூழலில் லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் இல்லை. வரும் மாதங்களில் கரோனா தளர்வுகள் அதிகரித்து திருமணம் போன்ற விசேஷங்கள் அதிகளவில் நடந்தால் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதோடு, 65 சென்ட்டில் மீன் பண்ணை, 45 சென்ட்டில் பிராய்லர் கோழி பண்ணையும் அமைத்துள்ளோம்.
இதன் மூலம் தற்போது வருவாய் ஈட்டி குடும்பச் செலவு களை சமாளிக்க முடிகிறது.
விவசாயத்தில் திட்டமிடுதலுடன் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் நல்ல வருவாய் கிடைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.