நொய்யலில் விடுவதால் வீணாகிறது: சொட்டு நீர் பாசனத்துக்கு கிடைக்குமா சுத்திகரிப்பு நீர்?

நொய்யலில் விடுவதால் வீணாகிறது: சொட்டு நீர் பாசனத்துக்கு கிடைக்குமா சுத்திகரிப்பு நீர்?
Updated on
2 min read

கோவை மாநகரத்தில் சுத்திகரிப்பு செய்து நொய்யலில் விடப்படும் சாக்கடை கழிவு நீரை சொட்டுநீர் பாசனத்துக்கு பயன்படும் வகையில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனை நடைமுறைப் படுத்தினால், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், சுல்தான்பேட்டை, பல்லடம் ஆகிய ஒன்றியங்களில் வறண்டு கிடக்கும் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பசுமையடையும். நொய்யல் முற்றிலுமாக தூய்மையடையும் என்றும் நம்பப்படுகிறது.

இதனை வலியுறுத்தி, முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர், ஆட்சியர், மேயர், பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் உட்பட பலருக்கும் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மனு அளித்துள்ள இந்த கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.ராஜகோபால் கூறியதாவது:

மழை பெய்யும் காலங்களில் நொய்யலின் நீலிவாய்க்காலிலிருந்து உக்கடம் வரை 23 குளங்கள் மூலம் 10 ஆயிரத்து 800 ஏக்கர் ஆயக்கட்டு பாசனமும், உக்கடம் முதல் திருப்பூர் மண்ணரை வரை 23 குளங்கள் மூலம் 5 ஆயிரத்து 200 ஏக்கர் ஆயக்கட்டு பாசனமும் நடந்தது. கோவை மாநகரம் ஆன பின்பு கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, செல்வசிந்தாமணி, குமாரசாமி குளம், குனியமுத்தூர் செங்குளம், பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் என குளங்களின் பாசனப் பகுதிகளில் தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பெருகிவிட்டன. இதனால் இங்கு மட்டும் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்வதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 2005, 2011 ஆகிய 2 வருடம் மட்டுமே எல்லா குளங்களும் நிறைந்தன. அதற்குப் பிறகு பருவமழை காலங்களில் கோவை நகருக்கு மேற்கில் உள்ள குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

கோவை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். 3 லட்சம் பேர் வெளியூர்களிலிருந்து இங்கு வந்து செல்கின்றனர். குடிநீர், வீட்டு உபயோகம், தொழிற்சாலை உபயோகத்துக்காக சிறுவாணி, பில்லூர், ஆழியாறு போன்ற குடிநீர்த் திட்டங்கள் மூலம் கோவை மாநகராட்சி 283 எம்எல்டி தண்ணீரை விநியோகிக்கிறது. நிலத்தடி நீர் கணக்கில், சுமார் 50 எம்எல்டி நீர் மக்களால் எடுக்கப்படுகிறது. இவை கழிவு நீராக, முழுமையாக சுத்திகரிக்கப்படாமல் ஓடைகளின் மூலம் நொய்யலில் கலந்து விடுவதால் மாசு ஏற்படுகிறது.

மாநகராட்சி, பாதாளச் சாக்கடை திட்டத்தின் மூலம் இதை முழுமையாக இணைத்து உக்கடத்தில் 70 எம்எல்டி, நஞ்சுண்டாபுரத்தில் 40 எம்எல்டி, ஒண்டிப்புதூரில் 60 எம்எல்டி என நாளொன்றுக்கு சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தியுள்ளன.

இதன் மூலம் மட்டும் நாளொன்றுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 170 மில்லியன் லிட்டர், அதாவது 17 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த தண்ணீர் ஆண்டு முழுவதும் தொய்வில்லாது கிடைக்கும். இந்த தண்ணீரை ராட்சத மின் இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு எடுத்துச் சென்று சொட்டு நீர் மற்றும் தெளிப்பு பாசனத்துக்கு வழங்கலாம். ஒரு ஏக்கருக்கு சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்று கணக்கிட்டால் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஒரு போக பாசனம் செய்ய முடியும். ஒரு போகம் என்பது 120 நாட்கள். அதுபோல், மூன்று போகம் விவசாயம் செய்ய - அதாவது சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீரை பாசன உரிமை கொடுத்து (வாட்டர் பர்மிட்) உறுதிப்படுத்தலாம். ஆயக்கட்டு பாசனப்பரப்பில் நேரடியாக பாசனம் செய்வதை விட சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தினால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

இதன் மூலம், மழைக்காலங்களில் குளங்களில் சேகரிக்கப்பட்ட நீர் அப்படியே இருக்கும். நிலத்தடி நீரும் அசுத்தப்படாது. அந்த தண்ணீரும் பாசனத்துக்கு பயன்படுத்த ஆய்வுகள் நடத்தப்படும். இத்திட்டத்தை பயன்படுத்த ஏற்கெனவே மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் 3 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துவிட்டதாலும், அதற்கு நிதி ஒதுக்கீடும் நடந்துள்ளதால், தற்போது சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தேவையான நிதி மட்டுமே தேவைப்படும்.

கோவை, திருப்பூர், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், கோவை மாவட்ட பொதுப்பணித்துறை, வேளாண்துறை தலைமை அலுவலர்கள், நீரியல் துறை பேராசிரியர்களை கொண்டு ஒரு ஆய்வுக்குழுவை அமைத்து ஆய்வு செய்தால் இத்திட்டம் சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in