களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிகளில் சோதனை- கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல்: எஸ்.ஐ., உட்பட 3 போலீஸார் மீது வழக்கு

ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு போலீஸார்
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு போலீஸார்
Updated on
1 min read

களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிகளில் கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள எல்லையில் உள்ளகளியக்காவிளை சோதனைச்சாவடி, திருநெல்வேலி மாவட்டஎல்லையில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி ஆகியவற்றின் வழியாக, கனிம வளங்கள் மற்றும் ரேஷன்பொருட்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதற்குசோதனைச்சாவடிகளில் பணியாற்றும் போலீஸாரே உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது. சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதிலும், அவற்றில் சிக்காமல் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்று வருவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதைத்தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் கனிமவளங்கள், ரேஷன் அரிசி கடத்தலை தடுத்தல் மற்றும் விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கும் வகையில், சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை 6.30 மணியளவில் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையில், களியக்காவிளை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புகுந்தனர். இதைப்பார்த்து அங்கு பணியி்ல இருந்த போலீஸார் பதற்றமடைந்து, தங்கள் கையில் இருந்த பணத்தை பக்கத்து அறையில் வீசி எறிந்தனர். பணத்தை சுருட்டி வைத்து ரப்பர் பேன்ட் வைத்து கட்டி வைத்திருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.14,600 கணக்கில் வராத பணம் இருந்தது. பணம் குறித்து அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் செய்யது உசைன் மற்றும் போலீஸாரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பணம் குறித்து முரணான தகவல்களை தெரிவித்தனர். காலை 9 மணி வரை இந்த சோதனை நடந்தது.

எஸ்.ஐ. செய்யது உசேன், எஸ்.எஸ்.ஐ. முத்து, ஏட்டு அசோக்குமார் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல், ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சேதானை மேற்கொண்டனர். வாகன பதிவு செய்யும் அலுவலகம், போலீஸார் ஓய்வெடுக்கும் அறை ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். இங்கும் காலை 9 மணி வரை சோதனை நடைபெற்றது. இச்சோதனை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in