

சட்டப்பேரவைத் தேர்தலை போலவே ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று 3 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சோளிங்கர் அடுத்த பானாவரம் கூட்ரோடு பகுதியில் கே.எஸ்.அழகிரி பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு அளித்தது தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. அவர் சர்வாதிகார கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால் அண்ணாமலைக்கு அப்படி தான் தோன்றும்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பால் விலை குறைப்பு, குடும்ப அட்டைகளுக்கு 4,000 ரூபாய் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது பாராட்டத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசும், கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசும் நிறைவேற்றாத திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்ற முடியாது. அதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும்.
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என குலாம் நபி ஆசாத் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருப்பது கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது.
இந்தியா முழுவதும் பரவியுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை எப்போது கூட்ட வேண்டும் என்பது சோனியா காந்திக்கு தெரியும். குலாம் நபி ஆசாத் தனது கருத்தை ஊடகங்களின் வாயிலாக தெரிவித்ததற்கு பதிலாக, சோனியா காந்தியை நேரில் சந்தித்து கூறி இருக்கலாம்’’. இவ்வாறு அவர் கூறினார்.