

காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இப்பிரச்சினையை அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு மாநில மக்களும் சகோதர, சகோதரிகள் போல் பழகி வருகின்றனர். சிலர் காவிரி விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றனர். அவர்கள் தங்களின் அரசியலுக்காக காவிரி விவகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது கண்டிக்கதக்கது.
காவிரி நதி நீர்த் தீர்ப்பாயத்தின் முடிவை இரு மாநில அரசுகளும் ஏற்று செயல்பட வேண்டும். இதை ஏன் அரசியலாக்க வேண்டும்?. காவிரி நதி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. காவிரித் தாய் தூய்மையானவர். இரு மாநில விவசாயிகளுக்கும் அவர் ஆசி வழங்கி வருகிறார்'' என்று அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் மேகதாடு அணை குறித்த கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். பின்னர் அவர் மதுரை ஆதீனத்திடம் ஆசி பெற்றார். பாஜக அரசு தொடர்புப் பிரிவுச் செயலர் ராஜரத்தினம், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.