நடப்பாண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், தட்டைப் பயறு சேர்க்கப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நடப்பாண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், தட்டைப் பயறு சேர்க்கப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் மற்றும் தட்டைப் பயறு ஆகியவற்றைச் சேர்க்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவா குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் மற்றும் தட்டைப் பயறு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 முறை இயற்கைச் சீற்றங்களால் நெல் உட்படப் பல பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் பணம் செலுத்துகின்றனர். இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் மற்றும் தட்டைப் பயறு சேர்க்கப்படவில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக நெல் பயிர் அறுவடைக் காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே 2021 பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் மற்றும் தட்டைப் பயறு வகைகளைச் சேர்க்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.

பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in