

ஜாதி வெறிக்கு இளைய சமுதாயம் பலியாகக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடுமலைப்பேட்டை இளைஞர் சங்கர் படுகொலையைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பேசினர்.
வைகோ பேசும்போது, ‘‘அந்தக் காலத்தில் ஜாதியை கேட்பது அநாகரிகம் என்ற எண்ணத்தை சமூகம் ஏற்படுத்தி வைத்திருந்தது. இப்போது பள்ளி, கல்லூரிகளிலும் ஜாதிய வட்டம் இருக்கிறது. இந்த தமிழ் மண்ணை நாங்கள் நேசிக்கிறோம். சங்கர் படுகொலை போன்ற கொடுமைகள் தொடரக்கூடாது என்று கவலைப்படுகிறோம். எனவே, ஜாதி வெறிக்கு பலியாக வேண்டாம் என்று இளைய சமுதாயத்தை கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
‘‘தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, ஜாதி ஆணவக் கொடுமையை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.