Published : 29 Sep 2021 01:28 PM
Last Updated : 29 Sep 2021 01:28 PM

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இந்திரகுமாரி: கோப்புப்படம்

சென்னை

கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991 - 1996 அதிமுக ஆட்சியின்போது இலவச வேஷ்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசக் காலணி வழங்கியதில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளில் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்திரகுமாரி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 1997-ம் ஆண்டு சமூக நலத்துறையின் செயலாளராக லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐஏஎஸ், மாற்றுத்திறனாளி மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் சண்முகம் ஐஏஎஸ், இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். அதில், ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96 ஆம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக ஏற்படுத்தி, 'மெர்சி மதர் இந்தியா' என்ற அறக்கட்டளையும் பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி, அரசிடம் பணம் பெற்றனர்.

காது கேளாதோர் பள்ளியும், மாற்றுத்திறனாளி பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி, அரசுப் பணத்தில் ரூ.15.45 லட்சம் மோசடி செய்துள்ளனர். இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி சுய லாபம் அடைந்துள்ளனர்.

இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்கள் அனைவரையும் இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (செப். 29) தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் சண்முகம் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என, நீதிபதி அலிசியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x