

அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 29) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தகட்டமாக, அடித்தட்டு மக்களோடு நேரடித் தொடர்புள்ள அமைப்பாக பஞ்சாயத்துராஜ் விளங்குகிறது. பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் காந்தி கண்ட கனவின்படி, சுயாட்சி அதிகாரம் கொண்ட குடியரசாக செயல்பட வேண்டும் என்பதைச் செயல்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு.
காலப்போக்கில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் செயல்பட்டு வந்தது. இதை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டுமென்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
இதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். அதன் பலனாக, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு பஞ்சாயத்துராஜ் நகர் பாலிகா ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.
பஞ்சாயத்துராஜ் ஆட்சி முறையின் பொதுக்குழுவாகவும், அதிகாரமிக்க அமைப்பாகவும் விளங்குவது கிராம சபை. இங்கு எடுக்கின்ற முடிவின்படிதான் கிராமப் பஞ்சாயத்து செயல்பட முடியும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அடித்தளமாக விளங்கும் கிராம சபைகளை ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டாயம் கூட்ட வேண்டும் என்பது சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.
கடந்த ஆட்சியாளர்கள் கிராம சபையைக் கூட்டவிடாமல் முடக்கி வந்தனர். தற்போது, திமுக ஆட்சி அமைந்த பிறகு, முதல் முறையாக காந்தி பிறந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தமிழக காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
எனவே, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்று காந்தி, நேரு, ராஜீவ் காந்தி ஆகியோர் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.