

‘பேக்கேஜ்’ ஒப்பந்த முறையை ரத்து செய்து பொதுப்பணித்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய ‘பேக்கேஜ் டெண்டர்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 2019 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தமுறையில் பல்வேறு புகார்கள்எழுந்தன.
இந்நிலையில், கடந்த ஜூனில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், ‘பேக்கேஜ்’ஒப்பந்த முறை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், ஒருவருக்கு மட்டுமே பல்வேறு துறைகளின் ஒப்பந்தங்கள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் பாதிப்பு
இதனால், ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒப்பந்தம் எடுக்கும் அந்த சில ஒப்பந்ததாரர்கள் தங்களிடம் உள்ள பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு பணிகளை முடிப்பதில் காலதாமதமும் ஏற்படுகிறது என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டிடப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சருடன் நடந்த கூட்டத்தை சுட்டிக்காட்டி, ‘பேக்கேஜ்’ ஒப்பந்தமுறை குறித்து வெளியிடப்பட்ட ஆணையை திரும்ப பெற பரிந்துரைத்தார். மேலும், உயர் நீதிமன்றத்தில் இந்த அரசாணைக்கு எதிரான வழக்குகள் இருப்பது குறித்தும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த ஆக. 27-ம் தேதி சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ‘பேக்கேஜ் ஒப்பந்தமுறை’ ரத்துசெய்யப்படும் என்று அறிவித்தார்.அமைச்சரின் அறிவிப்பை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில், ‘பேக்கேஜ் ஒப்பந்த முறை’ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.