Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அட்டை வழங்கும் முகாம்- மனவளர்ச்சி குன்றியவர்கள் அலைக்கழிப்பு

தாம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாமுக்கு வந்த மனவளர்ச்சி குன்றியவர்கள், மருத்துவர் வராததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தாம்பரத்தில் உள்ள தனியார்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு கை, கால்ஊனமடைந்தவர்கள், கண் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், வாய்பேச முடியாதவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதில்பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த குறைபாடு தொடர்பான மருத்துவர்கள் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அப்போதுதான் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

திருப்பி அனுப்பினர்

இந்நிலையில் இந்த முகாமுக்கு மனநல மருத்துவர் வராததால், மன வளர்ச்சி குன்றியவர்கள் சுமார் 20 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு வந்த மனவளர்ச்சி குன்றியவர்களும், அவர்களுடன் வந்திருந்தவர்களும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து, அவர்களுடன் வந்தவர்கள் கூறும்போது, “நாங்களே இவர்களை வைத்து பராமரிக்க பெரும் சிரமம் அடைகிறோம். எங்களைக் கூட இவர்கள் இதுபோல் அலைகழிக்கின்றனர்” என்று குற்றம் சாட்டினர்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாங்கள் முறைப்படி 4 மருத்துவர்கள் தேவை என்று தகவல் தெரிவித்துவிட்டோம். ஆனால் 3 மருத்துவர்களை மட்டுமே சுகாதாரத் துறையில் இருந்து அனுப்பியுள்ளனர். மன வளர்ச்சிக் குன்றியவர்களை வரவழைத்து திரும்பி அனுப்பியது எங்களுக்கே வேதனையாகத்தான் உள்ளது. அனைத்து துறையும் ஒன்று சேர்ந்துஉழைத்தால்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உதவிகளை செய்ய முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x