

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே ராசபாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் 35 இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றன.
இதுகுறித்து, இருளர் இன மக்களில் ஒருவரான மகேஸ்வரி தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாத்தூக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராசபாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் 71 இருளர் இன குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எங்கள் குடும்பங்களில் 36 குடும்பங்களுக்கு மட்டும் ஏற்கெனவே அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மற்ற 35 குடும்பங்கள் பலமுறை மனு அளித்தும், வருவாய்த் துறை அதிகாரிகள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்களுக்கான தொகுப்பு வீடு உள்ளிட்ட வசதிகள் பெற முடியாமல் இருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல், தொகுப்பு வீடுகள் இல்லாததால், மழைக்காலங்களில் வீட்டினுள் தண்ணீர் மட்டுமல்லாமல், பாம்புகள் புகும் வகையில் உள்ள குடிசை வீடுகளில் குழந்தைகளுடன் அச்சத்துடன் வசித்து வருகிறோம். மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள எங்கள் குடியிருப்பு பகுதிகளில் போதிய சாலை வசதி கிடையாது. அத்தியாவசிய தேவைகளுக்காக திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான (சுமார் ஒரு கி.மீ. தூரம்) இணைப்பு சாலையில் மின் விளக்குகள் பல ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், வெளியிடங்களுக்கு செல்வோர் இரவு வேளையில் பல்வேறு இன்னல்களுக்கிடையே வீடு திரும்ப வேண்டியுள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பலனில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, இணைப்பு சாலையில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, வருவாய்த் துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ராசபாளையம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல், சாலை வசதி, இணைப்பு சாலையில் மின் விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.