

லஞ்சம், ஊழல், பதவி ஆசை காரணமாக திராவிட இயக்கம் இப்போது வலுவிழந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் கூறினார்.
எம்ஜிஆர் ஆட்சியிலும் முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலும் கல்வி அமைச்சராக இருந்தவர் செ.அரங்கநாயகம். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அவர், கடந்த 6 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். இப்போதைய அரசியல், கூட்டணி விவகாரம், வாக்காளர் மனநிலை குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
அந்தக் காலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கொள்கை களை முன்னிறுத்திதான் ஓட்டு கேட்டார்கள். அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி போன்றோர் தேர்தல் நேரத்தில் விடிய விடிய பிரச்சார கூட்டங்களில் பேசுவார்கள். அன்றைக்கு இருந்த திராவிட இயக்கம், இப்போது முற்றிலும் மாறிவிட்டது. கொள்கைகளில் இருந்து தடம்புரண்டு விட்டனர். பணம் சம்பாதிக்க ஆசைப் பட்டதால் கொள்கைகளை கைவிட்டுவிட்டனர்.
லஞ்சம், ஊழல், பதவி ஆசை காரணமாக திராவிட இயக்கம் இப்போது வலுவிழந்துவிட்டது. அப்போதெல்லாம் ஓட்டுக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டார் கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. பணம் கொடுத்து வாக்கு களை விலைக்கு வாங்குகிறார் கள். வாக்காளர்களும் பணத்தை எதிர்பார்க்கும் நிலை உள்ளதென்றால் ஒட்டுமொத்த சமுதாய அமைப்பும் ஊழல்மய மாகிவிட்டது என்றுதான் அர்த்தம்.
தேர்தல் கூட்டணி என்ற சித் தாந்தமே கம்யூனிஸ்ட் கட்சியால் வந்த ஒன்றுதான். அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக கட்சி களை ஒன்று சேர்த்து கொள்கை அடிப்படையில் கூட்டணியை கம்யூனிஸ்ட் உருவாக்கும். ஆனால், இப்போது கொள்கை அடிப்படையில் எந்தக் கூட்டணி யும் உருவாக்கப்படுவதில்லை.
இவ்வாறு அரங்கநாயகம் கூறினார்.